• Sat. Apr 27th, 2024

புதிய வகை ஒமைக்ரான் தொற்று
தமிழ்நாட்டில் நுழையவில்லை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் என்ற புதிய வகை தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் கொரோனா தொற்று டெல்டா, ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களாக உருமாறியது. ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது. தற்போது ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வைரசாக உருப்பெற்றிருப்பதாகவும், இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று நுழைந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. தொற்று நுழையவில்லை இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று உருமாறி எந்த வைரஸ் வடிவில் வந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மாநில அரசுகளிடையே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இந்த கருவி ஒன்றிய அரசு சார்பில் 14 இடங்களில் இருக்கிறது. கொரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் அவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் அந்த தொற்று நுழையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *