இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் விடுமுறை காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தியுள்ளது.

இதனையடுத்து, கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை பொதிகை, குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இச்சேவையில் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது, விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக கரையேற்றப்பட்டுள்ளதால், சில வாரங்களாக இரண்டு படகுகள் மட்டுமே சேவையில் இருந்தன. இது சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், பூம்புகார் கழகம் தற்காலிகமாக இரண்டு சொகுசு படகுகளான ‘திருவள்ளுவர்’ மற்றும் ‘தாமிரபரணி’ படகுகளை, வட்டக்கோட்டை சுற்றுலா சேவைக்குப் பதிலாக விவேகானந்தர் மண்டப பயண சேவையில் இணைத்துள்ளது.
மேலும், விவேகானந்த கேந்திரத்திற்கு சொந்தமான ‘ஏகநாத்’ படகும், ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது மொத்தம் ஐந்து படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். “முன்பு மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது சற்றே விரைவாக படகுகளில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,” என
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா டிராவல்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து பயணிகள் வசதிக்காக மேற்கொண்ட இந்த ஏற்பாடு, சுற்றுலாத் துறையில் ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.