• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

Byவிஷா

Apr 7, 2025

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
தென்தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 7 செ.மீ., சுருளக்கோடில் 6 செ.மீ., பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.