கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.

கோவை, தடாகம் மற்றும் மருதமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் நாளியூர் சேவா ஆலயம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தச் சென்று உள்ளார்.
அப்பொழுது இருட்டில் ஒரு பிரம்மாண்ட உருவம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையைக் கண்டதும் மனோகரனின் வளர்ப்பு நாயான பைரவா குரைத்துக் கொண்டு யானையை நோக்கிச் சென்றது. நாய் யானைக்கு அருகில் செல்வதை கண்டு பதறிய மனோகரன் போகாத வா பைரு வா (பைரவா) உள்ளே வா என நாயை கட்டுப்படுத்த முயன்றார்.
அதே நேரத்தில் யானையை ஆக்ரோஷப்படுத்தாமல் இருக்க அந்த யானையை நோக்கி சாமி போ சாமி… போ சாமி என உருக்கமாக வேண்டினார்.
மனோகரனின் குடும்பத்தினர் இதனை செல்போனில் படம் பிடித்தனர் அந்த யானை எவ்வித தாக்குதலும் நடத்தாமல் நிதானமாக அங்கு இருந்து நகர்ந்து சென்றது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் அந்த யானை மீண்டும் அப்பகுதியில் உள்ள பார்த்திபன் என்பவரது தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
மருதமலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழக்கும் துயரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் ஊருக்குள் வரும் யானைகளால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




