கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.
யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.








