மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர் கோவில் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகரை, வழியனுப்பி வைக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் கதவுகளுக்கு பூப்பந்தல் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, அழகர் கோவிலில் இருந்து கிளம்பும் கள்ளழகர், ஏழு நாட்கள் கழித்து கோயிலுக்கு திரும்புவார். இந்த வருடம் இன்று (10ஆம் தேதி) மாலையில் புறப்படும் அழகர், 16ஆம் தேதி காலை 10 – 10.25 மணிக்குள் இருப்பிடம் திரும்புவார்.
கோயிலை விட்டு வெளியேறும் முன்பாக கோயிலின் காவல் தெய்வமான, 18 ஆம் படி கருப்பண்ணசாமி கோயில் முன்புள்ள, கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அப்போது கருப்பண்ண சாமியிடம் ‘சென்று வருகிறேன்’ என சொல்வார். அவர் தலையை ஆட்டி, ஆட்டி கேட்பது போல, அழகரை சீர் பாதம் தூக்கிகள் ஆட்டுவதை காண்பதே கண் கொள்ளா அழகு.

இந்த வைபவத்தை ஒட்டி, 18-ம் படி கருப்பண்ண சுவாமியின் கதவுகளுக்கு முழுக்க, முழுக்க மலர் மாலைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. முகப்பிலும், பக்கவாட்டு சுவர்களிலும் மலர்பந்தல் போடப்பட்டுள்ளது.
தாமரை மொட்டு, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து, விரிச்சி பூ, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களால் இந்த மாலை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் ஆலோசனையில், மதுரை குமார் மெஸ் ராமச்சந்திர குமார், சென்னை தொழிலதிபர் கீர்த்திவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த அலங்காரங்கள் செய்யப்பட்டன.
மஞ்சள் பூசிய கடவுளாக காட்சி தரும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி இந்த விழாவின் போது, முழுக்க முழுக்க மலர்கள் அலங்காரத்தினால் காட்சி தருவார். இந்த அலங்காரம் போடப்பட்ட பின்னர், சுவாமிக்கு விசேஷ தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.