புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கொட்டகைக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த 20 ஆடுகளை கடித்து கொன்றுள்ளன.


இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி முருகேசன் உள்ளிட்ட அந்த கிராமத்தினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
பொன்னன்விடுதி வெட்டன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொங்கல் வியாபாரத்திற்காக ஆடுகளை விவசாயி முருகேசன் வளர்த்து வந்த நிலையில் தற்பொழுது நாய்கள் ஆடுகளை கடித்து குதறி 20 ஆடுகள் உயிரிழந்துள்ளதால் செய்வது அறியாமல் தவித்து வருவதாகவும் அதனால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.





