• Sat. Apr 27th, 2024

தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் – தமிழர் பாரம்பரிய பண்பாடு, பொங்கல் விழா..!

ByKalamegam Viswanathan

Jan 1, 2024

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் என்ற தலைப்பில் தமிழர் பாரம்பரிய பண்பாடு மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், எம்.குமார் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது..,
தமிழ்நாடு அரசினுடைய அயலக தமிழர்கள் துறை சார்பாக வேர்களை தேடி என்ற திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களின் அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ் நாட்டிற்கு அவர்களுடைய வேர்களை தேடி வரவும், நமது மண்ணின் பண்பாடு, நம் மண்ணின் பழக்கவழக்கங்கள் இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு வேர்களை தேடி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என பேசினார்.

இத்திட்டத்தின் மூலமாக வெளிநாடுகளில் வாழக்கூடிய நம் குழந்தைகள், தமிழர்களை ஆண்டிற்கு இருநூறு நபர்களை தேர்வு செய்து, அழைத்து வந்து தமிழ்நாட்டின் முக்கியமான பாரம்பரிய இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று தமிழ் மண்ணின் பண்பாடு குறித்தும், தமிழ் மண்ணின் பெருமைகள் குறித்தும் இம்மண்ணில் காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய சமூக பழக்கவழக்கங்கள் குறித்தும், அவர்களுக்கு எடுத்து கூறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் வருகை தந்தார்கள்.

இராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்திற்கு வருகை புரிந்த ஆஸ்திரேலியா, பிஜி, ஸ்ரீலங்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்களை பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, சந்தனம் குங்குமமிட்டு மேளதாளம் முழங்க வரவேற்று மாட்டு வண்டிகளில் அழைத்து வந்து தேவதானம் கிராம மக்களிட்ட கோலங்களை பார்வையிட்டு, பாரம்பரிய முறைப்படி பொங்கலிடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுக்கள் (கரகாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், சிலம்பாட்டம் பறையாட்டம்) நடத்தப்பட்டது. அதில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கூடுதலாக இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் உறியடித்தல், இசைநாற்காலி, லெமன் அன்டு ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அயலக தமிழர் விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *