கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜகுமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகியோர் உடன் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் தங்கி இருக்கும் அறையில் சமையல் செய்து சாப்பிட்டு வந்து உள்ளனர். அப்பொழுது சாப்பாடு சிலருக்கு சரிவர இல்லாமல் பற்றாக்குறை இருந்து வந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதே போன்று நேற்று இரவு ராஜேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் ராகேஷ் குமார் ஆகியோர் அறையில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு இருந்து உள்ளனர். அப்பொழுது அவர்களது நண்பர்களான ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகிய ஐந்து பேர் சமையல் அறை அருகே மது அருந்து கொண்டு இருந்து உள்ளனர்.

பின்னர் சாப்பிடுவதற்காக அறைக்குள் வந்து பார்த்த போது உணவு பற்றாக்குறையாக இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில், ராஜகுமார் மண்டல் அங்கு இருந்த கத்தியை எடுத்து ராகேஷ் குமாரின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது, இதனால் கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து ராகேஷ் குமாரின் சகோதரர் ராஜேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கு காரணமான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தங்கி இருந்த அறையில் உணவு பற்றாக்குறை காரணமாக வட மாநில நபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது




