உசிலம்பட்டி அருகே டயர் வெடித்து நிலை தடுமாறி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த பெண் மீது மோதி விபத்தில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலை தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த பூச்சிபட்டியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்., மேலும் காரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் சிறுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த மீனாட்சியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த மீனாட்சியின் கணவர் தங்கராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இன்று மீனாட்சியும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.