• Sat. May 11th, 2024

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, ஓர் ஆண்டில் 6 கிலோ 500 கிராம் எடை

ByP.Thangapandi

Dec 26, 2023

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டாக கண்காணித்து எந்த குறைபாடுகளும் இன்றி 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை – கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மினிப்ரியா – புதுராஜா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்த பெண் குழந்தை, குறை பிரசவத்திலும், 700 கிராம் எடையுடனும் பிறந்தது.

இந்த குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர்களான ராதாமணி, செந்தில்நேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 66 நாட்கள் தீவிரமாக கண்காணித்து 1400 கிராம் எடையுடைய குழந்தையாக உருவாக்கி நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை சரிசெய்யும் பொருட்டு, இந்த குழந்தையை தொடர்ந்து ஓர் ஆண்டாக மூளை வளர்ச்சி, கண் பார்வை, கை, கால்கள் வளர்ச்சி, வளர்ச்சிக்கு ஏற்ற உடல் எடை உள்ளிட்டவற்றை கண்காணித்து சிகிச்சை அளித்து இன்று எந்த குறைபாடுகளும் இல்லாத குழந்தையாக சுமார் 6 கிலோ 500 கிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனையையும், குழந்தையின் பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக இன்று மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *