
மூடி மறைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பரிமளா (35).இந்த தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும், 3.5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் பரிமளாவின் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.
இது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதால், வட புதுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அங்கு சுமார் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கொப்புளங்கள் உடல் முழுவதும் அதிதீவிரமாக பரவியுள்ளது.
இதனையடுத்து மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பரிமளா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பழனிச்செட்டிபட்டிக்கு கொண்டுவரப்பட்டு அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று நோய் என்பதால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத்துறை இந்த விஷயத்தை முற்றிலுமாக மூடி மறைத்துள்ளது.மேலும் அந்தத் தெருவில் உள்ள பெண்களிடம் விசாரித்த போது, உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு உயிரிழந்தது மட்டுமே தங்களுக்குத் தெரியும் என்றும், பரிமளா உயிரிழந்தது குரங்கு அம்மை பாதிப்பால் தான் என்பது தங்களுக்குத் தெரியாது,அதுகுறித்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகமும் தங்களிடம் தெரிவிக்கவில்லை, இந்த தெருவில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
