• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக
வசித்த ஈரானியர் உயிரிழப்பு

பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தி டெர்மினல் படத்திற்கு தூண்டுதலாக அமைந்த பாரீஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்த ஈரானியர் உயிரிழந்து உள்ளார்.
ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் தாய்க்கு 1945-ம் ஆண்டில் பிறந்தவர் மெஹ்ரான் கரீமி நஸ்செரி. இங்கிலாந்து நாட்டுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக 1974-ம் ஆண்டு சென்றார். அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த பின்பு, ஈரானின் கடைசி மன்னரான ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு, பாஸ்போர்ட் இன்றி நாடு கடத்தப்பட்டார். நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அரசியல் புகலிடம் தேடி விண்ணப்பித்து உள்ளார். பெல்ஜியத்தில் உள்ள ஐ.நா. அகதிகள் அமைப்பு அவருக்கு அகதி அந்தஸ்து அளிக்க முன்வந்தது. ஆனால், தனது அகதிகளுக்கான சான்றிதழ் பாரீஸ் ரெயில் நிலையத்தில் திருடப்பட்டு விட்டது என கூறியுள்ளார். அவரை பிரெஞ்சு போலீசார் கைது செய்தனர். ஆனால், நஸ்செரியிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால், அவரை நாடு கடத்த முடியவில்லை. இறுதியில் 1988-ம் ஆண்டு ஆகஸ்டில் பாரீஸ் நகரில், சார்லஸ் டி கால்லே விமான நிலையத்தில் அவரை விட்டு விட்டு சென்றனர்.
முதலில், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக அந்த விமான நிலையத்தில் வசிக்க தொடங்கிய அவர், பின்பு அதுவே அவரது வாழ்விட பகுதியாக மாறி விட்டது. அவர் அமர்ந்திருந்த பலகையின் அருகேயே அவரது உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் வைக்கப்பட்டு இருந்தன. விமான நிலையத்தின் 2எப் என்ற முனையத்தில் அவர், தனது வாழ்க்கை பற்றி எழுதி கொண்டும், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை படித்து கொண்டும் வாழ்நாளை கழித்துள்ளார். இதனிடையே, அவருக்கு அகதிக்கான ஆவணங்கள் கிடைத்து உள்ளன. ஆனால், பாதுகாப்பின்மை, விமான நிலையத்தில் இருந்து போக விருப்பம் இல்லாமை, ஆகியவற்றால் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார். இதனால், 1988-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை முனைய பகுதியிலேயே தொடர்ந்து வசித்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டில் உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், பாரீஸ் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்தபோது, விமான பணியாளர்கள் அவருக்கு லார்ட் ஆல்பிரெட் என செல்ல பெயரிட்டு அழைக்க தொடங்கினர். விமான பயணிகளிடையே அவர் ஒரு பிரபல நபராக ஆகி விட்டார். தனது இறுதி காலத்தில் நஸ்செரி மீண்டும் சார்லஸ் டி கால்லே விமான நிலையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடல்நலம் மோசமடைந்தது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும், அதில் பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தி டெர்மினல் என்ற படம் அமைந்து இருந்தது. அந்த படத்தில் டாம் ஹேங்க்ஸ் நாயகனாக நடித்துள்ளார். இதேபோன்று, லாஸ்ட் இன் டிரான்சிட் என்ற பெயரில் பிரெஞ்சு படம் ஒன்றும் வெளிவந்தது. தி டெர்மினல் படத்தில் டாம், விக்டர் நவோர்ஸ்கி என்ற வேடம் ஏற்று, நடித்துள்ளார். அவர் நியூயார்க் நகரின் கென்னடி விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறார். ஆனால், அரசியல் புரட்சியால் ஓரிரவில் அவரது வாழ்க்கை புரட்டி போடப்படுகிறது. அவரது பயண ஆவணங்கள் செல்லாத ஒன்றாகி விடுகிறது. அவரது நிலைமை தெரிய வந்து தீர்வு காணப்படும் வரை விமான நிலையத்திலேயே அவர் தங்க வற்புறுத்தப்படுகிறார்.