• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று அரைஇறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.
வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை துவம்சம் செய்யும் சூர்யகுமார் யாதவின் பிரமாதமான ஷாட்டுகள் பரவசமூட்டுகின்றன. இதே போல் திரில்லிங்கான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 82 ரன்கள் விளாசி வெற்றியை தேடித் தந்ததும் சிலிர்க்க வைத்தது. இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால், எதிரணியை அச்சுறுத்தலாம்.
விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட இறங்கினார். அரைஇறுதியில் யாருக்கு வாய்ப்பு என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திற்கு முன்பாக நாங்கள் அரைஇறுதியில் யாருடன் மோதப்போகிறோம் என்பது தெரியாமல் இருந்தது. அதனால் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்குவதற்கு ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால் நாளைய இன்று நடைபெறும் ஆட்டத்தில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது என்று கூறி நழுவினார்.
பயிற்சியின் போது பந்து கையில் தாக்கியதில் லேசான வீக்கம் ஏற்பட்டது. அது சரியாகி விட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.
இங்கிலாந்து எப்படி?
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது. இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான். அவர்களது காயத்தன்மை இன்று எப்படி இருக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்வோம் என்று அந்த அணியின் கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.