• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி.வேலுமணி வழக்கை தீர்ப்புக்காக
ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு. முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது. கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வேண்டியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு, டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு வேலுமணியின் நண்பர் கே.சந்திரசேகர் உத்தரவுகளை பிறப்பித்தார். அதனடிப்படையில், சிறு ஒப்பந்ததாரர்களின் டெண்டர்கள் எவ்வித காரணமும் கூறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக டெண்டர் ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. அறிக்கை அளித்துள்ளார். அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியது. அதனை ஆராய்ந்த தமிழக அரசு 2020-ம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்தது. ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை. டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை.
ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளது.டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய எதிர்கட்சி மாநகராட்சி உறுப்பினர்கள் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், உள்நோக்கத்துடன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.