• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில்
திடீரென பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐ.நா.வின் பருவகால மாற்ற மாநாடு, எகிப்து நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். அவர், கிளாஸ்கோ பருவகால ஒப்பந்தம் பற்றி உரையாற்றுவதுடன் பிற நாடுகளையும், அதில் இருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததன்படி அதனை பின்பற்றும்படி வலியுறுத்துவார். இந்த பருவகால உச்சி மாநாட்டில், இங்கிலாந்து நாட்டை தூய்மையான ஆற்றல் கொண்ட ஒன்றாக உருவாக்கும் தனது நோக்கங்களை சுனக் வெளியிடுவார் என அதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறினார். இதனால், என்ன, எதுவென தெரியாமல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதுபற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார்பன் பிரீஃப் அமைப்பின் இயக்குனர் லியோ ஹிக்மேன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், பருவகால மாற்ற மாநாட்டின் மத்தியில் பிரதமர் ரிஷி சுனக் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றில் கூறும்போது, சுனக் மேடையில் பேச தயாரானபோது, அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறியுள்ளனர். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர், ரிஷி சுனக்கின் காதில் ஏதோ முணுமுணுத்தபடி காணப்பட்டார். இதுபற்றி அவர்கள் ஆலோசித்தது போல் தெரிகிறது. மேடையில் இருந்து செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்பது போல் அவர்கள் காணப்பட்டனர். எனினும் தொடர்ந்து மேடையிலேயே சுனக் நின்றார். இதனை தொடர்ந்து மற்றொரு உதவியாளர் உடனடியாக மேடைக்கு சென்று உடனே வெளியேறி செல்லும்படி சுனக்கை வற்புறுத்தி, அவரை அழைத்து சென்றார் என ஹிக்மேன் தெரிவித்து உள்ளார். இந்த மாநாட்டின் பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறியபோதும், அதற்கான தெளிவான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதனால், உலக நாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த மாநாட்டில், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.