• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கொடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் அப்ரீனுக்கு (ராஷ்மிகா மந்தனா) வந்து சேர்கிறது. அதனால் சீதா மகாலட்சுமியைத் தேடி இந்தியா வருகிறார் அப்ரீன். அவரைத் தேடி அலையும் அப்ரீனுக்கு சீதா – ராம் காதல் கதை அறிமுகமாகிறது. யார் இந்த சீதா – ராம்? அவர்களின் காதல் கதை என்ன? அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? இறுதியில் அந்தக் கடிதம் சீதாவிடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? – இவற்றைச் சொல்லும் படம் தான் ‘சீதா ராமம்’இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன், மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
மேலும், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜய்குமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா, வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தனக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு உறவு வேண்டும் என்று ஏங்கும் ராம் என்றஇந்திய ராணுவ வீரன் துல்கர் சல்மான்

அப்ரீனா என்னும் ராஷ்மிகா மந்தனா கருவிலேயே தீவிரமான இந்திய எதிர்ப்பாளராக வளர்க்கப்பட்ட பாகிஸ்தானிய பெண் லண்டனில் இந்தியத் தூதரின் காரை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு தீவிரமானவர்

பாகிஸ்தான் ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்த தனது தாத்தாவின் சொத்துக்கள் தனக்குக் கிடைக்க வேண்டுமெனில் தாத்தாவின் கடைசி வேண்டுகோளை அப்ரீனா நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

ராம்’ என்ற இந்திய ராணுவ லெப்டினென்ட் தனது காதலியான ‘சீதா மகாலட்சுமி’க்கு 20 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கடிதத்தை, அப்ரீனா அந்த சீதாவிடம் கொண்டு போய்ச் சேர்த்தால்தான் எனது சொத்துக்களை அப்ரீனாவுக்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தாத்தா சேர்த்துவிட்டதால் அந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க சீதாவைத் தேடி இந்தியாவுக்குள் வருகிறார் அப்ரீனா.

இந்தியாவில் ‘சீதா’ என்ற பெயர் மட்டுமே தெரியும். ஆள் யாரென தெரியாது. புகைப்படமும் இல்லை. ஹைதராபாத்தில் தற்போது மகளிர் கல்லூரியாக இருக்கும் ஒரு பழைய அரண்மனையை முகவரியாகக் கொண்ட அந்த கடிதத்தைச் சேர்ப்பிக்க தனது இந்தியநண்பன் துணையுடன் சீதாவை தேட தொடங்குகிறார்

அந்த தேடலில் சீதாராம் பற்றிய காதல் கதை அவர் மூலம் திரையில் விரிகிறது பார்வையாளனை இருக்கையைவிட்டு எழ விடாமல்

குடும்பமே இல்லாமல் தனக்கென்று உறவுகளும் இல்லாமல் ராணுவத்தில் லெப்டினென்டாக காஷ்மீரில் பணியில் இருக்கிறான் ராம். அப்போது மதக்கலவரம் ஒன்றை தனது சமயோசித செயலால் நடக்காமல் தடுக்கிறார் இதற்காக அவரை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர் அவரைப் பாராட்டி கடிதங்களாக எழுதிக் குவிக்கிறார்கள்.

அதில்ஹைதராபாத்தில் இருந்து ‘சீதா மகாலட்சுமி’ என்ற பெயரிலும் ஒரு கடிதம் ராமுக்கு வருகிறது. அதிலிருக்கும் வார்த்தைகளும், சொல்கின்ற விஷயமும் ராமின் மனதுக்குள் காதலை வளர்த்தெடுக்கிறது. கொஞ்சம், கொஞ்சமாக மனதுக்குள் அந்த சீதாவுடன் திருமணம் செய்து டூயட்டே பாடுகிறார் ராம்.
திடீரென்று ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொண்டு ஹைதராபாத் வரும் ராம், அந்த சீதா மகாலட்சுமியை கண்டறிகிறான். காதலையும் வளர்க்கிறான். சீதாவோ வெளிப்படையாக காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.
நிஜத்தில் ஹைதராபாத்தின் நிஜாம் குடும்பத்தின் இளவரசியான இந்த ‘சீதா’ என்னும் ‘நூர்ஜஹான்’ ராமுடன் இணைவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்தான் ஹைதராபாத்தின் இளவரசி என்பது தெரியாமலேயே ராமும் தன் காதலில் உறுதியாய் இருக்க.. இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் காதல் காவியத்தின் திரைக்கதை.ராமாக துல்கர் சல்மான், சீதாவாக மிருணாள் தாக்கூர், அஃப்ரினாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சிறப்பான தேர்வுதான். மலையாளம், இந்தி, தெலுங்கு என்று மும்மொழிகளிலும் படத்தைப் பேசப்பட வைக்கும் யுக்தியாக இவர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.ராமாக நடித்திருக்கும் துல்கர் தான் ‘ஒரு காதல் இளவரசன்’ என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். காதல் காட்சிகளில் காதலியாக நடிப்பவர்கள் நிஜமாகவே காதலித்துவிடும் அளவுக்கு அவரது நடிப்பில் ஒரு உண்மைத் தன்மை தெரிகிறது.காதலிக்க வரும் இளைஞர்களின் அந்தத் துடிப்பு, துள்ளல், எதையும் யோசிக்காத தன்மை, காதலைத் தவிர மற்றவைகளைப் பின் தள்ளுவது.. என்று நடித்திருக்கிறார்
துல்கர்.அதே சமயம் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ராணுவ மிடுக்குடன் நடித்திருக்கிறார் துல்கர். சீதாவாக நடித்திருக்கும் மிருணாள் தாகூர் முகத்தில் அவர் காட்டும் நடிப்பும், சின்னச் சின்ன ஆக்சன்களுமே அவரைப் பெரிதும் கவர வைக்கின்றன. தன் காதல் தோற்குமா, ஜெயிக்குமா என்கிற குழப்பத்தில் அவர் படும் அவஸ்தையும், இறுதியில் காதலரைத் தேடி வரும் காட்சியில் அந்த ஒரேயொரு அணைப்பிலும் “அப்பாடா” என்று பதட்டத்துடன் படம் பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது.
அப்ரீனாக வேண்டாவெறுப்பாக தாத்தா சொத்தை பெறுவதற்காக இந்த வேலைக்குள் இறங்கும் ராஷ்மிகா போகப் போக இந்தக் காதல் கதைக்குள் தானும் ஐக்கியமாகி எப்படியாவது அந்த சீதா மகாலட்சுமியைப் பார்த்தே தீர வேண்டும் என்று துடிக்கும் அளவுக்கு கதையும், திரைக்கதையும் அவரை இழுக்க.. அந்த பரிதவிப்பு நடிப்பை மிக அழகாக காண்பித்திருக்கிறார்.
கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கேற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த ‘சீதா ராமம்’ படம் ஒரு காவியம்தான். படத்தின் மையக் கரு என்னவோ காதலாக இருந்தாலும் அந்தக் காதலை, காதல் ஓவியமாக மாற்றியிருக்கிறது சுவையான திரைக்கதையும், திறமையான இயக்கமும்.இது காதல் படமாகவே இருந்தாலும், 1964-ம் காலத்தில் காஷ்மீரில் நிலவி வந்த சூழல், இந்து-முஸ்லீம் இடையிலான பிரச்சினை, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பற்றிய பிரச்னை, இந்தியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவி வரும் தீவிரவாத அமைப்புகள், இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் என்று பல விஷயங்களையும், சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்துள்ளனர். அதே சமயம் இரு மதங்களையும், இரு நாட்டினரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அளவுக்கு நடுநிலைமையுடனும் எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய கதாபாத்திரங்களான ராம், சீதா மற்றும் அஃப்ரீன் ஆகியோரின் பெயர்களையும், மதங்களையும் மாற்றிப் படமெடுத்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக இப்படி உண்மையைத்தான் பேசியிருக்கும்.
தீயில் சிக்கியிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி தாமதித்ததால் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் ராமின் செயல்பாட்டினால் அவரது இயல்பான குணமே தென்படுவதால் இது, அவரது கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஹனு, ராஜ் குமார் கந்தமுடி மற்றும் ஜெய் கிருஷ்ணா ஆகியோர் எழுதியிருக்கும் கதை, திரைக்கதையும், கார்க்கி எழுதிய வசனங்களும் தேசம், தேசப் பற்று, எல்லைகள், போர், அரசியல், மற்றும் மதங்களைவிடவும் மனித நேயமே முக்கியம் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறது.


அதே சமயம் நூர்ஜஹான் எதற்காக ராமுக்கு காதல் கடிதங்களை எழுதியனுப்பினார் என்பதற்கான கிளைக் கதையும், அப்ரீனாவை அவரது தாத்தா அந்தக் கடிதத்தை நூர்ஜஹானிடம் கொடுக்கப் பணித்த காரணத்திற்கான கிளைக் கதையும் யாருமே ஊகிக்க முடியாதவை.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு.காஷ்மீரத்தின் அழகு,பிரமாண்ட அரண்மனையின் பிரமிப்பு ஆகியன மட்டுமின்றி இராணுவவீரர்களின் உணர்வுகளையும் கூடக் காட்சிப்படுத்தி வரவேற்பைப் பெறுகிறார் பி.எஸ்.வினோத். பாடல் காட்சிகள் அனைத்தும் அற்புதம்விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகம்.திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத மெல்லிசை. அதற்கேற்ற வரிகள். தற்காலத் தலைமுறையை வியக்கவைக்கும் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
கடிதங்களே பார்த்திராத இந்தத் தலைமுறைக்கும் கடிதங்கள் மேல் ஈர்ப்புவருகிற மாதிரியான சொல்லாட்சிகளுடன் அமைந்த வசனங்களை எழுதியிருக்கிறார்
மதன்கார்க்கி வைரமுத்து
தமிழில் இப்பட வெற்றிக்கு அவரே முதன்மைக்காரணமாக இருப்பார்.
ஹனுராகவபுடி எழுதி இயக்கியிருக்கிறார். எந்நாளும் திகட்டாத காதலை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.