• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்

Byவிஷா

Jun 30, 2022

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில ஆளுநரிடம் பகத் சிங் கோஷியாரியிடம் விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள தேவேந்திர பட்னாவிஸ் ஜூலை 1ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி அசாமில் முகாமிட்டிருந்தனர்.சுயேட்சை உள்ளிட்ட இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் மகாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறினர்.எனவே, உத்தவ் தாக்ரே அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், நேற்று இரவு உத்தவ் தாக்ரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக தேசிய தலைவர் சிடி ரவி மும்பை விரைந்துள்ளார். இன்று மதியம் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்திற்குப் பின் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரவுள்ளார். அதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நாளை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்கும் பட்சத்தில் மீதமுள்ள 2.5 ஆண்டு கால ஆட்சியை பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து நடத்தும் என்று கூறப்படுகிறது.