• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாணவர்களின் நலனுக்காக முன்னெடுப்பு நடவடிக்கை… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Byகாயத்ரி

May 3, 2022

தமிழக மாணவர்களின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள உள்ள பல்வேறு முன்னெடுப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பட்டியலிட்டுள்ளார்.

• மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
• மேலும் இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், கூத்து, புகைப்படக் கலை, நடனம் போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
• இதனைதொடர்ந்து கலை – விளையாட்டுத் திறன்களிலும், மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், இந்திய அளவிலும், மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
• மேலும் மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் எனவும் பள்ளிப் பாடங்களை தவிர சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் ஆகியவற்றிக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
• இதனையடுத்து மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் கணினியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் கணினி நிரல் மன்றங்களும், எந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking இல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
• இவ்வாறு மாணவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருந்தால் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் உடலியக்க நிபுணர்களின் வாயிலாக சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும் எனவும் மேலும் மனநல ஆலோசனைகள் தேவைப்படுகின்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரை படி, மனநல ஆலோசனையானது நிபுணர்களைக் கொண்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
• மேலும் செயல்வழிக்கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள் மாணவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் விளைகின்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவை பள்ளி சத்துணவில் பயன்படுத்தப்படும்.
• இதை அடுத்து மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை தூண்டுவதற்காக மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும்.
• பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில், மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவரவிருக்கின்றன. அவ்வாறு 3 – 5 வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6 – 9 மாணவர்களுக்கு ’தேன் சிட்டு’ என்கிற இதழும் வெளிவரவிருக்கின்றன.
• மேலும், ஆசிரியர்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழும் வெளிவரவிருக்கிறது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இவ்விதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.
• இதனை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகளிலும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலும் உள்ள அறிவியலை அறிந்துகொள்ள வழிசெய்யும் வகையில் ’எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்கிற புரிதலோடு அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கென STEM எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
• மேலும் பள்ளிகளில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன், மேலும் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.