சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக். இவர் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த நாள் கேக்கை தனது நண்பர்கள் புடைசூழ நீண்ட வாளை வைத்து வெட்டினார். இதனை அபூபக்கர் நண்பர்கள் தங்களது செல்போனில் படமாக்கி சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.
இதுகுறித்து புகார் வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், பிறந்தநாள் கேக்கை வாளை கொண்டு வெட்டி, பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறி, முகம்மது அபுபக்கர் சித்திக் ஐயப்பன் ,சூர்யா என்பவர் உட்பட நான்கு பேரை தேவகோட்டை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், இதேபோல் மதகுபட்டியில் பிணையில் வந்த பிரேம்நாத், ராகுல் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் வாள் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மூவரும் மதகுபட்டி போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாள், பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தாலோ சமூகவலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.








