• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்…

Byகாயத்ரி

Mar 22, 2022

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அரோகரா கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாவில் போது தினமும் காலை மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 14-ந்தேதி கைப்பார நிகழ்ச்சியும், 19-ந்தேதி பங்குனி உத்திரமும், 20-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது. அந்த தேரை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு இருந்தது.

தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்து அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு கோவில் முதல் சங்கர் மற்றும் ரமேஷ் பட்டர் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை வீசினார். காலை 6:27மணி அளவில் கோவில் வாசலில் இருந்து தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.

விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. திருப்பரங்குன்றம் மலையை 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை 11.30 மணி அளவில் மீண்டும் கோவில் வாசலுக்கு வரும் அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர்.