• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய குறும்படம் வெளியீடு!

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம்; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்..

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி .சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும்.

நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவாகியுள்ள ‘தலைவன்’ என்கிற குறும்படத்தையும் வெளியிடும் விழா இன்று காலை 12 மணிக்கு சென்னை சாலிகிராமம் பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு ராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர், மற்றும் நடிகருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைவன் குறும்படத்தை அமைச்சர் சாமிநாதன் வெளியிட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை பூச்சி எஸ்.முருகன் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி பெற்றுக்கொண்டார். தலைவன் என்கிற பாடலை தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு அம்ரீஷ் இசையமைக்க, தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

அதேபோல மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை எளிதில் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன். கோபிநாத் இந்த குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறும்படத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பலனை சொல்லும் ஒரு வேன் டிரைவர் கதாபாத்திரத்தில் நடிகர் சுப்பு பஞ்சு நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசுகையில்,
இந்த மக்களை தேடி மருத்துவம் என்கிற மகத்தான திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறு துளியாக இருக்க விரும்பினேன். அதன் முயற்சியாகத்தான் நானும் சிங்கார வடிவேலனும் இந்த முயற்சியில் இறங்கினோம். தலைவன் குறும்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தனது படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு வந்து நடனக்காட்சியை வடிவமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல இன்று அவர் வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால் இதுவரை எந்த விழாவிற்கும் அழைத்துச் செல்லாத தனது மனைவியை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுப்பி வைத்துள்ளார். இந்த பாடலை எழுதுவதற்காக நான் மிகப்பெரிய அளவில் மெனக்கெடவில்லை.. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தொகுத்தேன். இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் அழகான பாடலாக அது உருவாகிவிட்டது” என்று கூறினார்.

வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் பேசும்போது,
“முதல்வர் ஸ்டாலின் எந்நேரமும் மக்கள் பணி மக்கள் பணி என்றே பாடுபட்டு வருகிறார். இந்த இரண்டு குறும்படங்களையும் இனி வரவிருக்கும் குறும்படங்களையும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் சிங்கார வடிவேலனும் உருவாக்கி இருப்பதில் மகிழ்ச்சி. அதேபோல திரையுலகிற்கு தேவையான அருமையான அறிவிப்புகளை விரைவில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்,
“மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழர்களையும் தமிழையும் காக்கும் முயற்சியில் மு.க ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதேபோல சினிமாவிற்கு தேவையான நலத்திட்டங்களை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அடுத்தடுத்து அறிவிப்பார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. தயாரிப்பாளர் சிவா எப்போதுமே பொதுநலன் கருதி பல விஷயங்களில் ஈடுபடுபவர்.. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி எடுத்துள்ளார்.. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா பேசும்போது,
“மக்களை தேடி மருத்துவம் என்பது பார்ப்பதற்கு ஏதோ ஒரு சாதாரண திட்டம் போல தெரியலாம்.. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் முதியவர்கள் பலரால் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை நிலவியது. அப்படிப்பட்டவர்களுக்கு அதுபோன்று சிரமம் கொடுக்காமல் மருத்துவமே அவர்களது வீடு தேடி வந்து சேவை செய்யும் அருமையான திட்டம் இது. இந்த திட்டத்தில் இதுவரை 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது,
“தேர்தல் முடிந்ததும் அந்த சமயத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்ததால் அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் அதிலேயே கவனம் செலுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.. அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக நான் கலந்து கொள்கிறேன்..

மக்களை தேடி மருத்துவம் என்கிற இந்த திட்டத்தை சினிமா வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்த தயாரிப்பாளர் சிவா, சிங்கார வடிவேலன் ஆகியோரை பாராட்டுகிறேன்.. இதேபோன்று மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் வருமுன் காப்போம் என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இடையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அந்த திட்டம் முதல்வரால் துவங்கப்பட்டுள்ளது..

இதுதவிர இன்னுயிர் 48 என்கிற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாம் சாலையில் செல்லும்போது யாராவது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்ப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. பாதிக்கப்பட்டவருக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது இந்த திட்டத்தின் அவசியத்தை நானே நேரில் உணர்ந்துள்ளேன். கலைஞருடன் பிரச்சாரத்துக்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டார். வேகமாக அவரை சென்று தூக்கி எனது காரிலேயே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். அன்று இந்த திட்டம் இருந்திருந்தால் எனக்கு 5000 ரூபாய் கிடைத்திருக்கும்” என்று இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார் அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன்.

அதுமட்டுமல்ல இந்த திட்டம் மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை அவர்கள் அனைவரும் அறியச்செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற குறும்படத்தை, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, திரையரங்குகள் அனைத்திலும் ஒளிபரப்ப விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை ஆற்றினார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். இந்த விழாவை தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கினார்.