• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவல்துறை அலட்சியத்தால் மீண்டும் திரும்புகிறதா 2008 சாதிக்கலவரம்..?

காவல்துறையின் அலட்சியத்தால் வேட்டைக்காரன்புதூரில் மீண்டும் 2008ம்
ஆண்டுபோல் சாதிக்கலவரம் ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளதா என்று
மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மக்கள் சக்தி நகரைச் சேர்ந்தவர்
குமார். இவரது மகன் ஹரிஹரசுதாகர் அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி
என்பவரிடம் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த
மதுரையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவரை காதலித்துள்ளார். இது தெரிந்ததும்
மேஜர் ராமசாமி, ஹரிஹர சுதாகரை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார்.
தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். இதனால் இருவரிடமும் இருந்து மேஜர் ராமசாமி செல்போனை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலியைப்பார்க்கச் சென்ற இடத்தில்தான் ஹரிஹர சுதனுக்கு தலைவலி ஆரம்பமாகியது. மேஜர் ராமசாமியிடம் பணியாற்றுவோர் ஹரிஹர
சுதாகரை கை, கால்களை கட்டி தென்னந் தோப்பிற்குள் கொண்டு சென்று சகட்டு மேனிக்கு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். உடல் முழுக்க காயங்களுடன்
ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் கேசவன், காளிமுத்து,
ராமன், மேஜர் ராமசாமி மற்றும் ராசாத்தி என்கிற பெண் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேஜர் ராமசாமியின் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொடூர தாக்குதல் சம்பவம்
நடைபெற்றதாகவும் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்வதாகவும்
புகார் எழுந்துள்ளது.


இதுதொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பைச் சேர்ந்தஒருவர் கூறுகையில்,
ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் இன்னும் பல இடங்களில் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பது குற்றமா.. அதற்காக அவரை கட்டி வைத்து கொடூரமாக தாக்குவது எந்த விதத்தில் நியாயம்.?.
இந்த சம்பவத்தில் ஆதிக்க சாதிக்கு
ஆதரவாக போலீசாரும் செயல்படுவதுதான் கொடுமை.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேஜர் ராமசாமி மீது எஸ்.சி. எஸ்.டி. க்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் போலீசார் அலட்சியமாக உள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு இதுபோல வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை
முன்பாக மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்நடந்தது. அதன் பிறகு ஆதிக்க சாதியினர் பிளக்ஸ் போர்டை அடித்து நொறுக்கி, கலாசு தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் கூரையை தீயிட்டு கொளுத்தியது என்ற
கொடூர சம்பவங்களும் அரங்கேறியது. அதன் பிறகு இரு சாதி பிரிவினரிடையே
ஏற்பட்ட மோதல் தமிழகமே பேசும் அளவிற்கு பரபரப்பானது.
இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் நேர்மையாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்
என்ன சாதி என்று பார்க்காமல் சட்டப்படி நடந்துகொண்டால்தான் சிறிய பிரச்னை
பெரிய அளவிலான மோதலாக மாறாமல் தவிர்க்க முடியும். ஆனால் இன்று வரை போலீசார் ஆதிக்க சாதிக்கு ஆதரவாகவே செயல்படுவது, மீண்டும் இப்பகுதியில்
ஒரு 2008ம் ஆண்டு சாதிக்கலவரத்தை உருவாக்குமோ என்ற அபாயகரமான
சூழலையே ஏற்படுத்தியுள்ளது என்றார்.