• Mon. Apr 29th, 2024

கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கையும், இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 19 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 6 முதல் மூடப்படுகிறது. மருத்துவம், துணை மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.ஆனால், மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் ஜனவரி 1 முதல் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியதை தொடர்ந்து, இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும். அரசு செயலகம், 50 சதவீத பணிப் பலத்துடன், துணைச் செயலர் பதவிக்கு கீழ் உள்ள அதிகாரிகளுடன் இயங்கும். மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.


பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர, மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் தவிர அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 6 வரை மூடப்பட்டிருக்கும்.
அடுத்த 2 வாரங்களுக்கு பப்கள், கிளப்புகள், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அரங்குகள் 50% இருக்கை வசதியுடன் செயல்படும். ஆனால், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அனைத்து பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கூறுகையில், புத்தாண்டுக்குப் பிறகு கோவாவில் இருந்து திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு கோவாவில் இருந்து திரும்பிய அனைவரையும் கண்டறியும் பணியில் உள்ளோம்.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு, RT-PCR சோதனை செய்யப்படுகிறது. பாதிப்பு உறுதியானதால், அவர்கள் ஹோட்டல் அல்லது கொரோனா பராமரிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ரயில்களின் இயக்கம் மற்றும் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *