• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை சுல்தான்பேட்டை அருகே பயங்கர விபத்து..!

BySeenu

Nov 28, 2026

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்மலப்பட்டி அருகே பரம்பிக்குளம்–ஆளியார் திட்ட (பி.ஏ.பி) கால்வாயில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கோர விபத்தில், காரில் பயணித்த இரு பெண்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பெரியப்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 70) மற்றும் மணி (வயது 45) ஆகிய இருவரும், பல்லடம் கேத்தனூரைச் சேர்ந்த ஓட்டுநர் ரகுநாத் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த மாருதி ஆல்டோ காரில் (TN 38 U 4339) பயணம் செய்து உள்ளனர்.

​திருப்பூர் வீரபாண்டிக்குச் சென்று விட்டு, உறவினர்களைச் சந்திப்பதற்காக மூவரும் கம்மலப்பட்டி நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். மதியம் சுமார் 1.00 மணி அளவில் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்மலப்பட்டி கால்வாய்ப் பாலத்திற்கு அருகே பி.ஏ.பி (PAP) கால்வாய்க் கரையோரமாக மேற்கில் இருந்து கிழக்காகக் கார் சென்று கொண்டு இருந்தது. ​அப்போது எதிர்பாராத விதமாகக் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஏ.பி கால்வாய்க்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து விழுந்தது.

கார் கால்வாயில் விழுந்ததும், ஓட்டுநர் ரகுநாத் காரின் கதவைத் திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். ஆனால், காரின் உள்ளே அமர்ந்து இருந்த சரஸ்வதி மற்றும் மணி ஆகிய இரு பெண்களும் வெளியே வர முடியாமல் காருக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
​
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
​கால்வாய்க்குள் மூழ்கிய காரில் இருந்து சரஸ்வதி மற்றும் மணி ஆகிய இரு பெண்களின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டன.

​இச்சம்பவம் குறித்துச் சுல்தான்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும், உயிர் தப்பிய ஓட்டுநர் ரகுநாத்திடம் விசாரணை நடத்துவதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.