கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், ‘பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ’ (2-வது பதிப்பு) மற்றும் ‘வேஸ்டெக் இந்தியா எக்ஸ்போ’ ஆகிய கண்காட்சிகள் தொடங்கின.

இக்கண்காட்சியை சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத் தலைவர் என். தேவகுமார், சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் என். மதிவண்ணன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தரப்பில் இயக்குநர் ராம் சௌந்தல்கர் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் முகமது முதாசிர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. நவீன பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் இயந்திரங்கள், பேக்கேஜிங், மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைவரும் இலவசமாகப் பார்வையிடலாம்.
தொடக்க விழாவில் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத் தலைவர் என். தேவகுமார் பேசுகையில், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பேக்கிங் உள்ளிட்ட தேவைகளுக்காக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது கடினம் என்பதால், அவற்றை முறையாகக் கையாள்வதும், மறுசுழற்சி செய்வதுமே இன்றைய சவாலாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைத் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள கோவை தொழில்முனைவோருக்கு இக்கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.


