மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கட்டக்குளம் கிராமத்தில் மதுரை வேளாண்மைக் கல்லூரி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மாணவிகளால் மண் வளம், அதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு பற்றிசெயல்முறை விளக்க பயிற்சியளித்தனர்.

இந்த பயிற்சியில் மாணவிகள் நிவேதா சு, கௌசல்யா ஆ, நிஹிதா மூ, பிரகல்யா செ, பிரனிதா க, பிரியதர்ஷினி க, விதுலா ஸ்ரீ மு, யக் ஷினி த, ஜெசிபர் எம். சேவியர் மற்றும் ரிஃபா நசார் ஆகியோர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மண் வளம் என்பது பயிர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் அடிப்படையாகும் என்றும், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அங்ககப் பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், மண் வளம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகளான மண் இறுக்கம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, நீர் பிடிப்புத்திறன் குறைதல் மற்றும் பயிர்களின் வளர்ச்சி பாதிப்பு போன்றவற்றை விவசாயிகளுக்கு விளக்கினர்.
தொடர்ந்து, அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண்ணின் இயற்கையான தன்மை பாதிக்கப்படலாம் என்றும், மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, மண் வளத்தை மேம்படுத்தவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினர். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா மற்றும் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களின் பயன்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். உயிர் உரங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை மேம்படுத்தி, மண் வளத்தைப் பாதுகாத்து, நிலையான வேளாண்மையை மேற்கொள்ள முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.


