• Wed. Nov 18th, 2026

திருப்பரங்குன்றம் தங்கச் சப்பர வாகனத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானை வீதி உலா..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2026

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமானின் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து திருவிழாவின் மூன்றாவது நாள் இன்று சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் தங்கச் சப்பர வாகனத்தில் எழுந்தருளி, கோவில் ரதவீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை திருவிழாவின் தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலை நேரங்களில் தங்க மயில், வெள்ளி பூதம், அன்னம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதியும், நவம்பர் 24ஆம் தேதி காலையில் சிறிய வைரத் தேரோட்டமும், மாலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.