• Fri. Nov 13th, 2026

குட்டிகளுடன் இருந்த தாய் நாயை அடித்துக் கொன்ற கொடூரம்..,

BySeenu

Nov 13, 2026

கோவை மாநகரின் குடியிருப்புப் பகுதியான கோவைப்புதூரில், குட்டிகளுடன் இருந்த வாயில்லா ஜீவனான தாய் நாயை நபர் ஒருவர் ஈவு இரக்கமின்றித் தூக்கிப் போட்டு அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்ட அப்பகுதிப் பெண்களை அந்த நபர் ஒருமையிலும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன.

கோவைப்புதூர் குடியிருப்புப் பகுதியில் தெரு நாய் ஒன்று அண்மையில் குட்டிகளை ஈன்று, தனது குட்டிகளைப் பராமரித்து வந்து உள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குட்டிகளுடன் இருந்த அந்தத் தாய் நாயை எந்தவித இரக்கமுமின்றிப் பிடித்துத் தரையில் தூக்கிப் போட்டுக் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.

​அவரது கண்மூடித்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தாயைப் பிரிந்த பச்சிளம் நாய்க்குட்டிகள் உணவின்றித் தவித்து அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

நாயைத் தாக்குவதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து, “வாயில்லா ஜீவனை ஏன் இப்படி அடித்துக் கொல்கிறீர்கள் ?” என நியாயமாகத் தட்டிக் கேட்டு உள்ளனர்.
​

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தனது தவறை உணராமல் கேள்வி கேட்ட பெண்களைப் பார்த்து ஒருமையிலும் மிகவும் ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி மிரட்டல் விடுத்து உள்ளார். அங்கு இருந்தவர்கள் இந்த சம்பவத்தையும் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.

தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.