• Thu. Nov 12th, 2026

வாக்காளர் பட்டியல் பிரதியைப் பெறுவதில் அ.தி.மு.க – காங்கிரஸ் தள்ளுமுள்ளு..,

BySeenu

Nov 12, 2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் இன்று முதல் தீவிரமாகத் தொடங்கி உள்ளன. இதன் இடையே, வாக்காளர் பட்டியலின் முதல் பிரதியைப் பெறுவதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​கூட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வாக்காளர் பட்டியலின் முதல் பிரதியை முதலில் யார் பெறுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே திடீர் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

முதலில் தேசிய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்சார் கோரிய நிலையில், நீங்கள் பின்னர் தான் வாங்க வேண்டும் என அ.தி.மு.க வினர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.