தேனியில் தீபாவளிப் பண்டிகையன்று பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், கடந்த தீபாவளி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தேனி சமதர்மபுரம் பகுதியில் சாலையின் நடுவே பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்டதுடன், அதனைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் மகி என்கிற மகேஸ்வரன், சூரியமூர்த்தி, தீபன் ராஜ், ஆகாஷ், கௌதம் மற்றும் பரத்பிரனேஷ் ஆகிய 6 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சம்பவத்தின்போது உடனிருந்ததாகக் கூறப்படும் மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 40 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.