• Tue. Nov 3rd, 2026

கார்த்திகை தீப திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் கலந்து கொள்ள கருணாநிதி சுவாமிகள் வேண்டுகோள்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் நினைத்தாலே முக்தி தரும் புண்ணியத் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இக்கோவிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான உலக புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15-ந் தேதி சாமி சன்னதி முன்பு உள்ள 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி அன்றிலிருந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிகழ்வைக் கண்டு தரிசிப்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகரம் முழுவதும் போதிய எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்குத் தட்டுப்பாடின்றி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
அவசர மருத்துவ உதவிக்காக கூடுதல் மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கிரிவலப் பாதையில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறைகளை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அண்ணாமலையார் மலை மீது பக்தர்கள் ஏற அனுமதி வழங்க வேண்டும். கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் பாதுகாப்புக் கருதி பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், அரசின் அனுமதி பெற்று 2,500 பக்தர்கள் மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தைத் தரிசித்தனர்.

அதேபோன்று 2026-ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிலும் மலைப்பாதையின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பக்தர்கள் உரிய அனுமதியுடன் மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தைத் தரிசிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல் – அமைச்சர் ஜோசப் விஜய், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் ஆகியோர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்- அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.