மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது மேம்பாலத்தின் நடுப்பகுதியில் ஆளை விழுங்கும் வகையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மேம்பாலம் ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினராக உள்ள எம் வி கருப்பையா அவர்களால் சுமார் 40 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு பல வருடங்களுக்கு பின்பு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

ரயில்வே மேம்பாலத்தில் ரயில்வே துறை சார்பில் கட்டப்பட்ட மேம்பால பணிகள் முடிவடைந்த பின்பும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் பணிகள் முடிக்கப்படாமல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கடந்த 2022 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முறையாக மற்றும் திட்டமிடாமல் கட்டப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் கீழே ரயில்வே கேட்டை கடந்து செல்லும் ரயில் நிலைய பயணிகள் உள்ளிட்ட யாருக்கும் முழுமையாக பயனடையாத நிலையில் தற்போது மேம்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.
முக்கியமாக மேம்பாலத்தின் நடுவே 10க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மேம்பால பக்கவாட்டு சுவர்களில் விரிசல் விழுந்து பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வடிந்து எப்போது வேண்டுமானாலும் பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் ரயில்வே மேம்பாலம் காணப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் அளித்தும் ரயில்வே துறை அதிகாரிகளோ தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய எம்எல்ஏவாக உள்ள சோழவந்தான் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கருப்பையா 2014 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் எம்எல்ஏவாக இருந்தபோது தொடங்கப்பட்ட இந்த பாலம் தற்போது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகிறது. ஆகையால் விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் முன் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் சேதம் அடைந்த பாலத்தின் முழு பகுதியையும் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பாலத்தை பயன்படுத்துபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமாக இந்த பாலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய நிலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை மறுசீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.