• Sun. Nov 1st, 2026

சி.ஐ.டி. கல்லூரியில் கிரேன் ஏ.ஐ. மையம் தொடக்கம்: 750 மாணவர்கள் பயன்பெறும் புதிய திட்டம்..,

BySeenu

Nov 1, 2026

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சி.ஐ.டி.), பொறியியல் கல்வியுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் கிரேன் என்ற ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரி சுகன்யா திறந்து வைத்தார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சந்தோஷ், முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

மையத்தின் செயல்பாடுகளை வழிநடத்த, அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்த்திக் துரைசாமி தலைமையில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 4 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 750 மாணவர்களுக்குத் தொழில்துறை சார்ந்த இரண்டு சிறப்பு ஏ.ஐ. பாடத்திட்டங்களும், நவீன ஆய்வகப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. கணினித் துறை மட்டுமின்றி இயந்திரவியல், சிவில், மின் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட அனைத்துப் பொறியியல் பிரிவுகளிலும் ஏ.ஐ. பயன்பாட்டை விரிவுபடுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.