• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

வீடு மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் சேவல்களுக்கு குறி..,

BySeenu

Oct 28, 2026

கோவை, மேட்டுப்பாளையம் சாலை கோட்டை பிரிவு பகுதியில், இருசக்கர வாகனங்களில் வரும் சிறுவர்கள் கும்பல் ஒன்று வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்களைத் திருடிச் செல்லும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
​
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோட்டை பிரிவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாகச் சேவல்கள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

​இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீவிரமாகக் கண்காணித்த போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 3 முதல் 4 சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து வருவதை நேரில் கண்டு உள்ளனர். அந்த சிறுவர்கள் கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பார்த்து வீடுகளின் முன்றிலும், தோட்டங்களிலும் ஆசையாக வளர்க்கப்பட்டு வரும் சேவல்களைத் திட்டமிட்டுத் தூக்கிக் கொண்டு கண நேரத்தில் தப்பியோடி விடுவது தெரியவந்து உள்ளது.

​தீபாவளி வியாபாரத்திற்குச் சதியா?
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில், பண்டிகை காலத்தில் சேவல் கறி மற்றும் பந்தயச் சேவல்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும்.

​இதனைப் பயன்படுத்தி, திருடிச் செல்லும் சேவல்களைச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பதற்காகவே இந்தச் சிறுவர்கள் கும்பல் இத்தகைய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறதோ ? என்ற சந்தேகமும், அதிர்ச்சியும் அப்பகுதி மக்கள் இடையே எழுந்து உள்ளது.
​
சிறுவர்கள் இதுபோன்று தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

​எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில் காவல் துறையினர் இரவு நேரக் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சேவல் திருட்டில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் செயல்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டை பிரிவு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.