• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருட்கள் கடத்தலில் 5 பேர் கைது..,

BySeenu

Oct 24, 2026

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக 5 பேர் நின்றிருந்தனர்.

உடனே போலீசார் அந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மதுரையை சேர்ந்த மாதவன் (வயது 23), கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த ரபீகர் (22), ஜெயராஜ் என்கிற தொட்டி ஜெயா (28), ஆகாஷ் (19), தமிழரசன் (20) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 2,980 போதை மாத்திரைகள், 2½ கிலோ கஞ்சா, ஊசிகள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் போதை மாத்திரைகளின் மதிப்பு மட்டும் ரூ.7½ லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போதை பொருட்களை யாருக்கு விற்பனை செய்ய கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கைதான 5 பேரும், பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளை ரூ.30-க்கு வாங்கிவிட்டு கோவைக்கு கடத்தி வந்து உள்ளனர். அவற்றை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளனர். அதில் ஒரு மாத்திரையை மட்டும் ரூ.250-க்கும் மேல் விற்பனை செய்து வருவது தெரியவந்து உள்ளது.

இதில் சிலருக்கு, 5 மாத்திரைகளை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் கலந்து, ஊசி மூலம் உடலில் ஏற்றியும் உள்ளனர். அதற்கு ஒரு போதை ஊசிக்கு மட்டும் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை வசூல் செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.