கோவை மாநகரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதும், வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருகிறது.இந்த நிலையில், நேற்று இரவு சாய்பாபா காலனியில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தபடி அதிவேகமாகச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே, வீலிங் செய்து இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞரை அடையாளம் காண, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



