• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம் பிடித்து சாதனை..,

BySeenu

Oct 16, 2026

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள், அகில இந்திய அளவிலான சிபிஎஸ்இ ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர்.

ஹரியானா மாநிலம், கர்னாலில் உள்ள எஸ்.பி.எஸ். கான்வென்ட் பள்ளியில் அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் மண்டல அளவில் வெற்றி பெற்ற ஒன்பது அணிகள் பங்கேற்றன. தென்மண்டலம்-1 அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி, அகில இந்தியப் போட்டியில் கலந்து கொண்டது.

லீக் சுற்றுப் போட்டிகளில் குஜராத் சஞ்சய் கோதாவத் பள்ளி அணியை 16-0 என்ற கோல் கணக்கிலும், ராஜஸ்தான் பிரின்ஸ் அகாடமி அணியை 7-1 என்ற கோல் கணக்கிலும், ஓமன் இந்தியன் ஸ்கூல் அல் சீப் அணியை 32-1 என்ற கோல் கணக்கிலும் வென்றது. ஹரித்வார் எஸ்.ஆர்.வி.எம். பள்ளி அணியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

அரையிறுதிப் போட்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஓ.பி. ஜிண்டால் பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்பால் விகாஷ் பள்ளி அணியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கர்னால் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் டாக்டர் ராகுல் ரையா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர். மாணவர் அணியினரையும், பயிற்சியாளர்களான டி.பி. அனிதா, யோகானந்த் ஆகியோரையும் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே. ராமசாமி பாராட்டினார். பள்ளி முதல்வர், துணை முதல்வர், கல்விப்புல முதன்மையர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் வாழ்த்தினர்.