• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்நன்றி..,

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கையில் கூறியதாவது:-

சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போக்குவரத்து வசதிகள் மேம்படுவதும், பொதுமக்களின் பயண நேரம் குறைவதும், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்தையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்போம்

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக, நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு மற்றும் பாரத தேசத்தின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளுக்குக் கிடைக்கும் நிதி ஆதாரங்கள், அவற்றின் பின்னணியில் செயல்படுவோர் மற்றும் மாணவ, மாணவியர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதற்கான நோக்கங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்தால், அவை ஆதாரங்களின் அடிப்படையில் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, உண்மை நிலவரம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, வெளிநாட்டு நிதியுதவி அல்லது ஆதரவு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் சட்டப்படி உரிய விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேவேளையில், மாணவ, மாணவியர்களின் கல்வி, எதிர்காலம் மற்றும் நலன்கள் அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படக் கூடாது. இளைஞர்கள் தங்களுடைய கல்வியிலும் எதிர்கால இலக்குகளிலும் கவனம் செலுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஜனநாயகத்தின் மாண்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்வு, தேசிய ஒற்றுமை மற்றும் பாரத தேசத்தின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தேசப்பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் திருவண்ணாமலை ஆதீனம் மடம்.