• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உ.பியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பட்டியலின சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் 16 வயது பட்டியலின சிறுமி ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தொகுதியில் நடந்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வைரல் வீடியோவில், இரண்டு பேர் சிறுமி ஒருவரைத் தரையில் வைத்துப் பிடித்திருக்கின்றனர். மூன்றாவது நபர் ஒருவர் தடியால் சிறுமியின் உள்ளங்காலில் தொடர்ந்து அடிக்கிறார். வலியால் அலறித் துடித்த அந்தச் சிறுமி அவர்களிடம் கெஞ்சுகிறார். ஆனால், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர்கள், அவரை தொடர்ந்து கொடூரமாகத் தாக்குகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்தச் சிறுமி தாக்கப்பட்டதன் பின்னணி தற்போது தெரியவந்திருக்கிறது. அந்த நபர்களால் தாக்கப்பட்ட சிறுமி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை அந்த நபர்கள் மொபைல் போன் திருடிய குற்றத்துக்காகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஒருதரப்பினர் சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் வீண்பழி சுமத்தி, தாக்கியதாகக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமேதி காவல்துறையினர் சிறுமியைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அமேதி காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிறுமியைத் தாக்கியவர்கள் மீது போக்சோ, எஸ்.சி / எஸ்.டி சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான சூரஜ் சோனி, சிவம், சகால் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று பதிவிட்டிருக்கிறது.

https://twitter.com/MissionAmbedkar/status/1475805028610830342?s=20