மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி மையப் பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில்அருகில் இருந்த பெரிய மரம் வளர்ந்து அதன் கிளைகள் கோயில் கட்டடத்தில் விழுந்து கோவிலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டு வராமல் உள்ளனர். கோவில் பகுதியில் உள்ள மரம் கட்டடத்தில் இணைந்து கட்டிடத்தை சேதப்படுத்தி உள்ளது. அருகில் குடியிருப்பு பகுதிகளும் அதிக அளவில் உள்ளது. ஆகையால் எப்போது வேண்டுமானாலும் மரம் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுத்தலாம் என இந்த பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தம் மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். ஆகையால் உடனடியாக இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவில் பாதி விழுந்த நிலையில் உள்ள மரத்தை ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அகற்றப்படவில்லை என அந்தப் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரிடம் முறையாக தெரிவித்தும் தற்போது வரை அகற்றவில்லை என கூறப்படுகிறது.
மேலும் மரத்தை அகற்றுவதற்கு வருவாய்த்துறையினர் பணம் கேட்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே இந்த மரம் மின் வயர் மீது விழுந்ததால் அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சேதம் அடைந்துள்ள மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




