மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அருகில் புதிதாக திறக்கப்பட்ட மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனியில் இருந்து செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு தனது மகளைப் பார்ப்பதற்கு நேற்று இரவு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் தாய் தவமணி சென்று கொண்டிருந்தார்.

மூனாண்டிபட்டி அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தவமணி சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

அப்போது அதே இரவில் அவ்வழியாக எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த கருமாத்தூர் கேசவம்பட்டியை சேர்ந்த சேர்ந்த இளங்கிள்ளி என்பவர், எதிர்சாலையில் நடந்த இந்த விபத்தைப் பார்ப்பதற்காக மேம்பாலத்தின் நடுவே உள்ள தடுப்புச் சுவரைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, பாலத்தின் இரு சாலையின் நடுவே உள்ள இடைவெளியில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை – தேனி சாலையில் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்த இந்த மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில், இருவழிச் சாலைகளுக்கு இடையே முறையான பாதுகாப்பு கம்பிகளோ அல்லது தடுப்பு வேலிகளோ அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பாதுகாப்பு குறைபாடே இரண்டாவது நபர் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த செக்கானூரணி காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் ஒரே இடத்தில் நடந்த இந்த அடுத்தடுத்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








