• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் பேருந்துக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த கல்லூரி மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Aug 31, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்துக்காக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்
காலை தங்களின் சொந்த ஊருக்கு சென்று இரவு 8 மணிக்குள் கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக 6:00 மணி முதல் காத்திருந்தனர். 8 மணி ஆகியும் பேருந்து வராததால் மாணவர்களின் எண்ணிக்கை நேரம் ஆக ஆகஅதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் சில மாணவர்கள் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் ஒரு வழியாக 8 மணிக்கு மேல் வந்த பேருந்தில் ஒரே பேருந்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆட்டு மந்தையை அடைத்து செல்வது போல் அடைத்து சென்றது பேருந்து நிலையத்தில் இருந்த பொது மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில மாணவர்கள் 8 மணிக்கு மேல் ஆகிவிட்டால் கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என கூறியது போக்குவரத்து துறையின் அலட்சிய போக்கை அப்பட்டமாக காட்டியது.

மேலும் ஒரே பேருந்தில் 200க்கும் மேற்பட்டோர் படிகளில் தொங்கிக் கொண்டும் உள்ளே அடைத்துக் கொண்டும் சென்றது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். வாரந்தோறும் நடைபெறும். இது போன்ற சம்பவங்கள் மூலம் மாணவர்கள் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகளோ சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளோ எந்த கவலையும் படுவதாக தெரியவில்லை என கூறுகின்றனர்.

அதாவது கடந்த சில மாதங்களாக சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கூடுமானவரை பள்ளி நேரங்களில் குறித்த நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் மாணவர்கள் பெற்றோர்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களிலாவது விடுமுறை மற்றும் விழா காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் பள்ளி நேரங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகளை இயக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.