கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கான வெள்ளலூர் பகுதி வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்தும் தினமும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலானக் கழிவுகள் வெள்ளலூரில் உள்ள பிரதானக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காய்ந்த நிலையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களில் தீ வேகமாகப் பரவி, கிடங்கு முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய இணைப்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள், பல வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக வெள்ளலூர், போத்தனூர், செட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றி உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் பரவி உள்ளது. துர்நாற்றம் வீசி வருவதாகப் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.
கோடை மற்றும் காற்று வீசும் காலங்களில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இதுபோன்று அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருவதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




