இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் (GIO) சார்பில் “பெண்மையைப் போற்றுவோம்” (Embracing Femininity) என்ற தலைப்பிலான தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. மாணவிகளின் கல்வி வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு GIO இயங்கி வருகிறது. தீவிர ஆணாதிக்கக் கட்டுப்பாடு அல்லது பெண்மையின் இயல்பை இழந்து இயங்குதல் ஆகிய இரு வேறு தீவிர நிலைகளுக்கு மாற்றாக, பெண்கள் தங்கள் இயல்பான பெண்மையைப் போற்றி, சுயமரியாதையுடனும் சமநிலையுடனும் வாழ ஊக்கப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் கருத்தரங்குகள், விழிப்புணர்வு வகுப்புகள், கலைக் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் கலந்துரையாடல்கள் வாயிலாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சந்திப்பில் GIO தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மாநிலச் செயலாளர் சகோதரி நுஹா மரியம், மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரி ஷமீம், கோவை மாநகரச் செயலாளர் சகோதரி ஷஹ்னாஸ் செய்யது மற்றும் இணைச் செயலாளர் சகோதரி ருபானா ஆகியோர் கலந்துகொண்டு பிரச்சாரத்தின் நோக்கங்களை விளக்கினர்.





