கரூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 24), என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் தடாகம் அருகே உள்ள மடத்தூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் பிரவீனுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.

இதனால் அந்த இளம்பெண் மனோஜிடம் சரியாக பேசுவதை தவிர்த்தார். காதலி தன்னிடம் பேசாமல் இருக்க பிரவீன்தான் காரணம் என்பதை அறிந்த மனோஜ் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து ஒட்டன்சத்திரத்துக்கு பிரவீனை வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவருடைய உடலை கிணத்துக்கடவு அருகே தண்டவாளத்தில் வீசிச்சென்றனர். அந்த வழியாக வந்த ரெயில் ஏறியதில் பிரவீனின் உடல் துண்டு துண்டானது.
கொலை வழக்காக மாற்றி கைது
அந்த உடலை மீட்ட போத்தனூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மனோஜ், கார்த்திக் ஆகியோர், பிரவீனை கொலை செய்துவிட்டதாக கூறி கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அதன் பின்னர்தான் பிரவீன் கொலை செய்யப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரையும் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தேக மரணம் பிரிவை கொலை வழக்கமாக மாற்றி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதான மனோஜ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
ரூ.4 லட்சம் சம்பளம்
மனோஜூம், கோவையை சேர்ந்த இளம்பெண்ணும் 4 ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் மனோஜிக்கு இங்கிலாந்து நாட்டில் வேலை கிடைத்தது. அங்கு அவர் மாதம்தோறும் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினார். இதனால் அவர் தனது காதலிக்கு கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து உள்ளார். தினமும் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதத்துக்கு முன்பு மனோஜின் காதலிக்கு பிரவீனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு உள்ளது. அவருடன் தினமும் பேசிவந்ததால், மனோஜிடம் பேசுவதை அந்த அந்த இளம்பெண் தவிர்த்து உள்ளார். இதற்கிடையே தனது காதலி பிரவீனுடன் பேசுவதால்தான் தன்னிடம் சரியாக பேசுவது இல்லை என்பதை தனது நண்பர்கள் உதவியுடன் மனோஜ் கண்டுபிடித்தார்.
நிம்மதி இல்லை
பின்னர் அவர் பிரவீனின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை கண்டுபிடித்து, அவரிடம் பேச தொடங்கினார். அப்போது அவர் நன்றாக புகைப்படம் எடுப்பதை தெரிந்து கொண்டார். மனோஜின் காதலியிடம்தான் அவர் பேசிவருவது தெரியாமல், அவரிடமே தான் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக பிரவீன் கூறி உள்ளார். அப்போதுதான் தனது காதலி தன்னை தவிர்ப்பதற்கான காரணம் குறித்த முழு விவரமும் மனோஜிக்கு தெரியவந்தது.

தனது காதலியை பிரவீன் அபகரித்துக்கொண்டது மனோஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. அத்துடன் இங்கிலாந்தில் வேலை செய்ய மனமும் இல்லை. இதனால் மாதந்தோறும் ரூ.4 லட்சம் வாங்கி வந்த வேலையை விட்டு விட்டு காதலியை தேடி சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது காதலியிடம் தன்னை வெறுப்பதற்கான காரணம் குறித்து கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. இதற்கும் பிரவீன்தான் காரணம் என்று நினைத்ததால் அவரை தனது நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
======================================================
(பாக்ஸ்)விசாரணையில் போலீசார் அலட்சியம்
கொலை செய்யப்பட்ட பிரவீனை தண்டவாளத்தில் வீசிச்சென்றதால் அவர் மீது ரெயில் ஏறியதில் உடல் துண்டானது. ஆனால் பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் உயிரிழந்ததாக வந்து உள்ளது. இருந்தபோதிலும் அதை போத்தனூர் ரெயில்வே போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மனோஜ், கார்த்திக் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த பின்னர்தான், பிரவீன் யார் என்றும், அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதும் போலீசாருக்கு தெரியவந்து உள்ளது. எனவே இதுபோன்று அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரவீனின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





