• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

குட்டிகளுடன் அணிவகுத்த காட்டு யானைகள் கூட்டம்..!

BySeenu

Jul 6, 2026

கோவை, மாங்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாகப் பசுமைக்குத் திரும்பிய காடுகளின் எல்லையில், தங்களின் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மிக அழகாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்து உள்ள கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகக் கோயம்புத்தூரில் நிலவி வந்த கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக, காடுகளுக்குள் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி வனவிலங்குகள் கடும் அவதிக்கு உள்ளாகின. இதன் காரணமாக, காட்டு யானைகள் ஒற்றையாகவும், கூட்டமாகவும் காட்டை விட்டு வெளியேறிச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தி வந்தன.

​இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கோவை குற்றாலம் போன்ற முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதோடு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் முழுவதும் தற்போது மீண்டும் பசுமைக்குப் பாய் விரித்து உள்ளன.

காடுகளுக்குள் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், ஊருக்குள் வந்த யானைகள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் தங்களின் இருப்பிடமான அடர்ந்த வனப்பகுதிக்குத் திரும்பத் தொடங்கி உள்ளன.

​இதன் ஒரு பகுதியாக, தமிழக – கேரளா எல்லைப் பகுதியான தடாகத்தை அடுத்த மாங்கரை வனச்சரக எல்லையில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடங்கிய கூட்டம் ஒன்று உலா வந்தது. இந்தக் கூட்டத்தில் உள்ள பெரிய பெண் யானைகள், தங்களின் குட்டி யானைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராதவாறு தங்களுக்கு நடுவே பத்திரமாக அரவணைத்து அழைத்துச் சென்றன.

​காட்டின் பசுமையை ரசித்தபடி, ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் கட்டுக்கோப்புடன் ராணுவ அணிவகுப்பு போல அந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் நடந்து சென்ற அழகிய காட்சியை, அங்கு இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார்.

​வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்கள் குறைந்து, இயற்கையின் மடியில் யானைகள் தங்களது குட்டிகளுடன் சுதந்திரமாக உலா வரும் இந்த ‘கியூட்’ வீடியோ காட்சிகள், தற்பொழுது கோவையின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முழுமையாக ஆக்கிரமித்து நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.