கோவை கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்த பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி, அந்தப் பகுதி மக்கள் இடையே கடுமையான பீதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை சோமையனூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்து உள்ளார். நேற்று நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் ஊடுருவிய சிறுத்தை, ஈஸ்வரனின் வீட்டுப் பகுதிக்குள நுழைந்து, அவர் வளர்த்து வந்த கோழிகளில் 3-க்கும் மேற்பட்ட கோழிகளைக் கவ்விக் கொண்டு சென்று உள்ளது. காலையில் எழுந்து பார்த்த போது கோழிகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாகத் தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்து உள்ளார்.

அப்போது, இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை கோழிகளை வேட்டையாடிச் செல்லும் கொடூரக் காட்சிகள் பதிவாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது சோசியல் மீடியாக்களில் வெளியாகி, அந்தப் பகுதி கிராம மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த முறை கோழிகளுடன் சிறுத்தை சென்றாலும், அடுத்த முறை அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளையோ ? அல்லது வளர்ப்புப் பிராணிகளையோ ? ‘டார்கெட்’ செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.




