• Mon. Jun 8th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் இறுதி மரியாதை..,

ByKalamegam Viswanathan

Jun 8, 2026

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் காவல்துறையினரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூர் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சேவுக பாண்டி (27), கடந்த ஜூன் மூன்றாம் தேதி 9 மணி அளவில் சிவகாசி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.

அவசர சிகிச்சையின் பொருட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அடுத்த கட்ட மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக ஜூன் நான்காம் தேதி அதிகாலை 2 35 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

தலைக்காயப்பிரிவு 101 ICU வார்டில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.‌ இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உடலில் உள்ள உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன்வந்தனர்.‌ இறந்த சேவுக பாண்டியின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தேனூர் காவேரி மருத்துவ நிலைய மருத்துவமனை ஆகியவற்றுக்கு தலா ஒரு சிறுநீரகமும், மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு கல்லீரலும், தோல் மற்றும் கருவிழிகள் ஆகியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில், தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் இறந்த சேவுக பாண்டியன் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நோயாளியின் உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஏழு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

BBA பட்டதாரியான சேவுக பாண்டியன், கோவையில் சென்ட்ரிங் பணி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.