• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ராக்கி திரைப்படம் – சிறப்பு பார்வை

தயாரிப்பு – ரா ஸ்டுடியோஸ்
இயக்கம் – அருண் மாதேஸ்வரன்
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு-S. கிருஷ்ணன்
படத்தொகுப்பு-நாகூரான்
நடிப்பு – வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், பூராமு, ஜெயக்குமார்
வெளியான தேதி – 23 டிசம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 9 நிமிடம்

ராக்கிஇந்தப் படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா படைப்பாளிகள், ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரகனி கழுத்தை ஆட்டோவில் வைத்து அறுக்கும் காட்சி வன்முறையின் உச்சம் என்றார்கள் ஆனால் அந்தக் காட்சி திரைக்கதையுடன் பொருந்திப்போனது

ராக்கி படத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக மரத்தை அறுப்பது போன்று அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிருந்தால் முழுப் படமும் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.


சிறையில் இருந்து பதினேழு வருடங்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய விரோதி மணிமாறன் (பாரதிராஜா) கதாநாயகனை பழிவாங்கத் துடிக்கிறார்.

இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை தமிழ்சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தப்படாத வண்ணம் ரத்தம் கொப்பளிக்க கொப்பளிக்க பார்வையாளனுக்கு கடத்துவதுதான் ‘ராக்கி’.படத்தின் துவக்கத்தில் நாயகன் சிறையில் இருந்து விடுதலையானபின் திரையில் விரியும் காட்சிகள் தொடர்ந்து வரும் காட்சிகள், ‘கலைப்’ படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், படம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கும்போது புதுவகையான உணர்வை ஏற்படுத்துகிறது.கதை என்று பார்த்தால், ஒரு கடத்தல் கும்பல், அவர்களுக்குள் நடக்கும் மோதல், பழிவாங்கல் என்ற தமிழ் சினிமாவின் அரதப்பழசான திரைக் கதைதான். ஆனால், அதனைப் படமாக்கியிருக்கும் விதத்திலும் கதையைச் சொல்லியிருக்கும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்அருண் மாதேஸ்வரன்.

ஒரு திரைப்படத்தில் ‘நான் லீனியர்’ பாணியில் கதை சொல்வது வழக்கமானதுதான். ஆனால், இந்தப் படம் ஒரு நான் – லீனியர் நாவலைப் படிப்பதைப் போல அமைந்திருக்கிறது. சில தருணங்களில் ஒரு கவிதையைப் படிப்பதைப் போல இருக்கிறது. ஒரே காட்சியில் அத்தனை அடுக்குகள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் கொப்புளித்து வழியும் ரத்தத்தின் நாற்றம் படம் முழுக்கவீசுகிறது.

இந்தக் கதையின் முக்கியமான முடிச்சுகள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ஃப்ளாஷ் – பேக் மூலம் அவிழ்ந்துகொண்டே வருவது சிறப்பாக இருக்கிறது.படத்தின் கடைசிக் காட்சிவரை பார்வையாளனை பதட்டத்தில் வைத்து ஆச்சரியத்தைத் தக்கவைக்கிறார் இயக்குநர்.

ராக்கி படத்தில் காட்டப்படும் வன்முறை, கொடிய, கொடூர மனம் கொண்டவர்களால் கூட சகித்துக்கொள்ள முடியாதவை. சுத்தியலால் மண்டை ஓடு நொறுங்கும்வரை அடித்துக் கொல்வது, குத்தூசியால் குத்திக் கொல்வது, ஆணியால் கண்களில் குத்துவது, சடலத்தை வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றுவது, குடலை உருவி மாலையாகப் போடுவது என வன்முறையை ரசித்து ரசித்து வன்முறைகளின் பேரரசனாக தன்னை பாவித்துக்கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

பார்க்க பார்க்க புடிக்கும் என்கிற சிவாஜி படத்தின் வசனம் போன்று
படம் பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளனுக்குஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல இந்த வன்முறை காட்சி பழக்கப்பட்டுவிடுகிறது இன்னும் கொஞ்சம் கூடுதல் வன்முறை காட்சி வராதா என மனம் எதிர்நோக்குகிறது.

நாயகனாக வரும் வசந்த் ரவியின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் தென்படுவதில்லை. ஆனால், பாத்திரத்திற்கு பொருத்தமான நபராகவே இருக்கிறார். மணிமாறனாக வரும் பாரதிராஜா, கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவைப் போலவே தூள் கிளப்புகிறார் தன் மகனை வழிக்குக் கொண்டுவர துருப்பிடித்த பிளேடால், விரலை நறுக்கச் சொல்லும் காட்சியில், அவர் குரலை உயர்த்தும்போது திரையரங்கே அமைதியாகிவிடுகிறது.


இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் Old Boy போன்ற பல திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. முதலில் செய்த ஒரு கொலைக்காக பல ஆண்டுகள் சிறியிலிருந்துவிட்டு வரும் நாயகன், வெளியில் வந்ததும் கொடூரமாக பல ஆட்களைக் கொன்று குவிக்கிறார். காவல் துறையே கண்ணில் படுவதில்லை. அதேபோல, ஒரே நபர் 20, 30 பேரை அடித்துத் துவம்சம் செய்வதும் சற்று அதீதமாகப்படுகிறது.

ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சி இருக்கிறதே, அந்தக் காட்சி இந்தக் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது. அந்த ஒரு காட்சியில்தான் எத்தனை விஷயங்கள் தெரியவருகின்றன?

இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இணையாகப் பாராட்டத்தக்கவர், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் அதேபோல, தர்புகா சிவாவின் இசை, காட்சிகளுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மிருதங்கம் ஒலிக்கிறது. வேறு பல காட்சிகளில் மௌனமே இசையாக அமைகிறது.

ராக்கி – வன்முறையின் அழகியல்